முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சத்தாய் நிஷ்களமாய்

 

 



சங்கராபரணம்                     ரூபகதாளம்


சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும்மிலதாய்,

சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே,

எத்தால் நானடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-துளூ

அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே?


எம்மாவிக்குருகி உயரீந்து புரந்ததற்கோர்

கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய்,

சும்மாரஷணைசெய். சொல்தந்திரம் யாதுமிலேன், 

அம்மான் உன்னையல்லால் எனக்கார் துணை, யாருரவே?


திரைசேர் வெம்பவமாம் கடல்மூழ்கிய தீயரெமைக்

கரைசேர்த் துய்க்கவென்றே புணையாயினை, கண்ணிலியான்

பரசேன் பற்றுகிலேன்ளூ என்னைப் பற்றிய பற்றுவிடாய்,

அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே?


தாயே, தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும்

நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்கான்ளூ

'ஏயே' என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை?

ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே?


பித்தே றிச்சுழலும் ஜெகப்பேய்ப்பிடித் துப்பவத்தே

செத்தேன், உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய்ளூ 

எத்தோ ஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்-று

அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே?


துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும்

தப்பா தேவெளியா நடுநாளெனைத் தாங்கிக்கொள்ள,

இப்பா ருய்யவென்றே மனுக்கோலமெ டுத்த எங்கள்

அப்பா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருரவே?



நிஷ்களமாய் - உருவமில்லாததாய்

ஒருசாமிய - ஒப்புமை

சித்தாய் - ஆவிக்குரியதாய்

புரந்ததற்கோர் - காப்பாற்றுவதற்கோர்

துய்க்க - தப்புவிக்க

புணையாயினை - தெப்பமானாய்

துப்பார் - அறிவுள்ள

மறைந்தீட்டிய - நாட்டிய


தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்ற சிற்றூரில் ஏப்ரல் 23, 1827 அன்று பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சங்கர நாராயண பிள்ளைளூ தாயார் தெய்வ நாயகி அம்மையார். இவர்கள் வைணவ சமயத்தினர். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், கல்வி அறிவும் மிக்கவர்கள். கிருஷ்ணப் பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தை தொடர் சொற்பொழிவாக விளக்கியுரைக்கும் திறம் பெற்றவர். எனவே தனது மகனுக்கும் தக்க ஆசிரியர்கள் மூலமாக தமிழ்ப் பயிற்சி அத்துடன் வடமொழிப் பயிற்சியும் அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் கவிஞர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்நாட்களில் இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு தன்னை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தார். தனது முப்பதாவது வயதில் சென்னையிலுள்ள தூய தாமஸ் ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்றார். அது முதல் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணப்பிள்ளை என்று அழைக்கப்பட்டார். இவர் சென்னையில் திருவர்த்தமானி என்ற இதழில் துணை ஆசிரியராகவும் மற்றும் மாநில உயர்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலி அருகில் உள்ள பாளையம்கோட்டை சி.எம்.எஸ் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகவும், கேரளா திருவனந்தபுரத்திலுள்ள மகராசர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 

இவர் காலத்தில் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகிய தமிழ் அறிஞர்கள் வாழ்ந்துவந்தனர். 

'இரட்சணிய யாத்திரிகம்' என்ற காப்பியத்தை எழுதி பெரும் புகழ் பெற்றவர் இவர். மேலும், இரட்சணிய மனோகரம், போற்றித் திரு அகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் எழுதியுள்ளார். அப்படியே, இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல் மற்றும் ஹெ.ஆ.கிருஷ்ணப்பிள்ளை கிறிஸ்தவரான தன் வரலாறு புத்தகத்தையும் எழுதியுள்ளார். காவிய தரும் சங்கிரகம் என்னும் இலக்கியத் தொகுப்பும் இவரால் படைக்கப்பட்டதே. வேதப் பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் என்ற அரிய நூல்களின் ஆசிரியரும் இவரே. 

1900 ம் ஆண்டு பிப்ரவரி 3 அன்று இவ்வுலகத்தை விட்டு பிரிந்து சென்றார். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

ரோஜாப்பூ வாசமலர்கள்

ரோஜாப்பூ வாசமலர்கள் என்கிற பழமையான இந்தப்பாடலை பாடியவர் சகோதரர் ஆர். ஜொசயா அவர்கள்.  அவரது சகோதிரி திருமதி. டாசனி அவர்களின்  திருமணம் 1962 ஆம் ஆண்டில் நாசரேத்தில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கதீட்ரலில் வைத்து நடை பெற்றது. அப்பொழுது இந்தப்பாடலை எழுதி பாடினார். இன்று உலகமெங்கிலும் உள்ள தமிழ் கிறிஸ்தவ திருமணிங்களில் பாடப்பட்டு வருகின்றது.